பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய 6 மாணவர்கள் பேராதனை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 மாணவர்களும் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவாா்கள் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், பேராசிரியரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காணொளிகளை அடிப்படையாக வைத்து 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாணவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் துணைவேந்தரின் மகன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதிவிட்டு சென்றதாகவும் இதன்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததனையடுத்து முன்னாள் துணைவேந்தர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவரது மகன் காவற்துறைப் பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது