உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து சுயாதீனமாக தேர்தலை நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளூராட்சி ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று(31.01.23) அரச அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடிய போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாத நிலையில், அதன் சொத்துக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமென உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கோரிக்கையை உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சிடம் முன்வைக்குமாறு அறிவுறுத்தியதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைவாக, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய(31.01.23) சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.