இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கை இன்று(01.02.23) ஜெனீவாவில் வௌியிடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் நாட்டின் மனித உரிமைகள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு விடயங்களும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மனித உரிமை மேம்பாட்டிற்காக அரசாங்கம் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட விடயங்கள், மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பிலும் இன்றைய அறிக்கையில் வௌிப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில், இலங்கை சார்பில் விடயங்களை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளது.
இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.