இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் வழங்கிய இசை கச்சேரி குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்டமைக்காக மலேசிய தேசிய அணி வீராங்கனை ஹனிஸ் நதியா ஓன் என்பவா் மலேசிய ஹொக்கி கூட்டமைப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் துர்நாற்றம் பிடித்தவர்கள் என்று மறைமுகமாக அவர் விமர்சித்திருந்ததாக முறைப்பாடு எழுந்ததைத் தொடர்ந்து ஹனிஸ் நதியா மீதான தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. 26 வயதான குறித்த வீராங்கனையின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 28ஆம் திகதியன்று மலேசியாவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைக் காண சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் திரண்டிருந்த நிலையில், இசை நிகழ்ச்சி நடைபெற்ற புக்கிட் ஜலீல் அரங்கத்தில் துர்நாற்றம் வீசியிருக்கக்கூடும் எனும் பொருள்பட ஹனிஸ் நதியா ஓன். இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார்
குறிப்பிட்ட அந்த அரங்கில் ரஹ்மானின் நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசிய இந்திய வம்சாவளியினர் ஆவர். எனவே அவர்களைக் குறிவைத்து ஹனிஸ் நதியா ஓன், தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. .
ஹனிஸ் நதியா ஓன் அவரது குறித்த பதிவுக்காக மன்னிப்பு கோர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ள நிலையில் ஹனிஸ் நதியா தாம் ஓர் இனவாதியல்ல எனவும் தமது நட்பு வட்டத்தில் இந்தியர்கள் பலர் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.