திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னா 66ம் பிரகடனத்தின் (Vienna Declaration and Programme of Action), இரண்டாவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்நெறிமுறைகளின்படி, தமது அரசியல் நிலைப்பாட்டையும், பொருண்மியம் மற்றும் சமூக கலாச்சார விடயங்களையும் மேற்கொள்ளும் வழிவகைகளைத் தீர்மானிக்கும் உரித்துடையவர்களாக அவர்கள் இருப்பர்”
அப்பிரகடனத்தில், மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பது மனிதவுரிமை மீறலாகவும், அவர்களது உரிமையினை முறைப்படி நிலைநாட்டுவதனை மறுதலிக்கும் செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில்- தமிழர்கள் ஒரு தேசமாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் தமது பொருண்மிய, சமூக, கலாசார மேம்பாட்டை மேற்கொள்வதற்கான உரிமையை, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் மறுத்துவந்த காரணத்தாலும், தமிழ் மக்களது இருப்புக்கு ஆபத்து உருவாகி வந்ததனாலும், 1977ம் ஆண்டு, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தனிநாட்டினை அமைப்பதற்கு ஆதரவு வழங்கி, ஜனநாயக ரீதியில் பெருந்திரளாக வாக்களித்தார்கள்.
அதன்பின்னர், சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பில் கொண்டு வந்த 6வது திருத்தத்தின் அடிப்படையில், தனிநாடு கோருவதனை சட்டவிரோதமான செயலாக ஆக்கியுள்ளது. நடைமுறையில் இவ்விடயம் தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையிலிருக்கின்ற, மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் ஒற்றையாட்சி முறையிலான அரசியலமைப்பிலிருந்து, அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுவதனைக் கூட, பிரிவினைவாதமாகப் பார்க்கப்படும் நிலையே காணப்படுகிறது.
1 comment
தமிழர்கள் தங்கள் உரிமைகளை அடைய, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.