இலங்கைப் பிரஜைகளின் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் அச்சுறுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது என்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கரிசனை கொண்டுள்ளதாக ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும், அதன் அங்கத்துவ அமைப்புகளும் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளும் 22 மார்ச் 2023 அன்று வெளியிடப்பட்ட உத்தேச ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ தொடர்பாக ஆழந்த கரிசனை கொண்டுள்ளனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டமாகிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (தற்காலிக விதிகள்) பதிலாக வரையப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஊடக சமூகத்திற்குப் பொருந்தாத பல சர்ச்சைக்குரிய கூறுகள் உள்ளன என்று ஸ்தாபனம் கருதுகின்றது.
முன்மொழியப்பட்ட சட்டமூலம், “பயங்கரவாதச் செயல்கள்” என்பதன் பரந்த மற்றும் தெளிவற்ற வரையறையைக் கொண்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் விதத்தில் விளக்கம் அளிக்கப்படலாம்.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்திலுள்ள பரந்துபட்ட அதிகாரங்களினால் பேச்சு குற்றப்படுத்தலானது, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட அல்லது ஊக்குவிக்க அல்லது தயார்ப்படுத்துவதற்கான தூண்டுதலாக புரிந்து கொள்ளப்படலாம்.
அத்துடன் அது அவர்களின் நோக்கம் அல்ல என்பதை நிரூபிக்க பிரதிவாதி மீது ஆதாரத்தின் சுமை ஏற்படுத்தப்படுகின்றது.
பிரசுரங்களை வெளியிடுபவர்கள், விநியோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் அல்லது அனுப்புபவர்களுக்கும் இந்தக் குற்றங்கள் பொருந்துவதுடன் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் பொருட்களாகவும் மொழிபெயர்ப்பு செய்யப்படலாம்.
சட்டமூலத்தின்படி, இரகசியத் தகவல் என்பது ‘தேசிய பாதுகாப்பு / பாதுகாப்பு’ மீது ‘பாதகமான தாக்கத்தை’ ஏற்படுத்தும் எந்தத் தகவலாகவும் இருக்கலாம், அதில் ‘பொதுத் தளத்தில் இல்லாத எந்தத் தகவலும்’ அடங்கும்.
எனவே, ‘இரகசியத் தகவல்’ என்ற பரந்த மற்றும் தெளிவற்ற வகைப்படுத்தலானது, குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் பல குற்றங்கள் தற்போது ‘பயங்கரவாத குற்றங்கள்’ என மறுவடிவமைக்கப்படுவதால், ஊடகத்தில் பணிபுரிபவர்கள் அவர்களின் கடமைகளை நிறைவேற்றும் போது அவர்களை ஒரு ஆபத்தான நிலைக்கு உட்படுத்தலாம்.
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான மற்றும் ஒன்றிணைவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரஜைகளின் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளானவை முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் அச்சுறுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்த வேண்டியதன் அவசியத்தை ஸ்தாபனம் புரிந்து கொண்டாலும், ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் அவதானத்தையும் அது அங்கீகரிக்கின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.