இலஞ்சம் கொடுத்து காவல்துறைப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் புதன்கிழமை(25) மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றது.
கடந்த 21.04.2023அன்று ஏறாவூர் காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான காவல்துறைக் குழுவினருக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கின்ற புகையிரதம் வந்தாறுமூலை பகுதியில் தரித்து நிற்பதாகவும் குறித்த புகையிரதம் பயணிக்கின்ற தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறைக்குழு ஏற்கனவே வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவினருக்கும் ஐயங்கேணி பகுதி சேர்ந்த இளைஞர் குழுவிற்கும் முன்விரோத மோதலின் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுளள்தாகவும் ஐயங்கேணி பகுதியில் இருந்து வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த குழுவினர் வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவினருடன் தாக்குதலின் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினரிலும் சிலர் காயமடைந்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறைக்குழுவினா் மோட்டார் சைக்கிளை தீ வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து ஏறாவூர் நீதிமன்றத்தில் அன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக முன்ஆயத்தங்களை காவல்துறையினா் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்காக அவரது 45 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவரும் ரூபா 20 ஆயிரம் பணத்தை காவல்துறைப் பரிசோதகர் வை. விஜயராஜாவிற்கு இலஞ்சமாக வழங்கி கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொணடு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

