பிரான்ஸ் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட, பாதாள உலகக் குழுவின் தலைவரென அறியப்படும் “ரத்மலானை குடு அஞ்சு” “குடு மன்னன்” என்றழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்த சில்வாவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மனித படுகொலை பலவற்றுடன் தொடர்புடையவர் எனக்கூறப்படும் ‘குடு அஞ்சு’ கடந்த புதன்கிழமை அன்று, பிரான்ஸ் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு இலங்க அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், குடும்ப சண்டை காரணமாக அவருடைய மனைவி, காவற்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, ‘குடு அஞ்சு’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீர் தனஞ்சய சில்வாவின் தந்தையான தெஹிவளை- கல்கிஸை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரஞ்ஜன் டி சில்வாவை 2018 ஆம் ஆண்டு படுகொலைச் செய்தமை மற்றும் அங்குலானை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டமை தொடர்பில் ‘ரத்மலானை குடு அஞ்சு’ வின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.