இந்தியாவின் மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இன்று (01.07.23)) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார்.
விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு சென்றுகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது.
பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இருந்து மேம்பாலத்தின் பில்லரில் பேருந்து மோதியதில் அதன் டீசல் கொள்கலன் வெடித்து பேருந்தில் தீப்பற்றியது.
பெரும்பாலான பயணிகள் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், ஒருசிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறி உயிர் பிழைத்தனர் என காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், “புல்தானா மாவட்டத்தில் சம்ரிதி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,” என பதிவிடப்பட்டுள்ளது.