2014ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சென்னை மீனவர்கள் நல சங்கத்தினால் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று(12.07.23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இராமேஷ்வரத்தின் ஒரு பகுதியாகவே கச்சத்தீவு காணப்பட்டதாகவும் 1974 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தொல்லை கொடுப்பதாகவும் 2013 ஆம் ஆண்டு வரை 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கவும் 1974 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று(12.07.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் 2014 ஆம் ஆண்டின் பின்னர் தமிழக மீனவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் இந்திய மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் மத்திய அரசு மன்றில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.