சில்லறைக்கு விற்ற சுயநிர்ணயம்
முதலைகளுக்கு ஒப்பிடப்படுபவர்
எவருக்கும் அஞ்சமாட்டார்
எவரையும் அஞ்சவைப்பார்
சட்டத்தைக் கயிறாக
திரிக்க வல்லார்
கரும்புச் சக்கையாகவும்
பிளிய வல்லார்
ஏற்றுவார்
ஏற்றினால்
எவர் சொன்னாலும்
இறக்க மாட்டார்
யார் அவர்? யாரவர்?
மா விலை
முட்டை விலை
மசகு எண்ணெய் விலை
எதற்கும் விலை வைப்பார்
வைத்தால் வைத்ததுதான்
எவர் சொன்னாலும்
கேளார் அவர்
யார் அவர்? யாரவர்?
முதலாளி
முதலாளி
முதலாளிதான் அவர்!
அரிசிக்கும் மாவுக்கும்
அய்யாயிரம் காசுக்கும்
சில்லறையில்
வாக்குகளை வாங்கியவர்
சொல்லுகிறார்
அவர்கள் கேட்கிறார்கள் இல்லையென்று
யார் இவர்? யாரிவர்?
அவர்கள்
கேட்கிறார்கள் இல்லையென்று
சொல்பவர் யார்? சொல்பவர் யார்?
யார் இவர்? யாரிவர்?
அரசியல்வாதி
அரசியல்வாதி
அமைச்சராகிய அரசியல்வாதி
“ஏற்றிய விலையை இறக்கிவிடு”
“எங்களின் சாவைத் தவிர்த்துவிடு”
கேட்பவர் குரலை நசிப்பவர் யார்?
தண்டிக்க சிறையில் அடைப்பவர் யார்?
அரிசியும் மாவும் அய்யாயிரம் காசும்
செய்கிற வேலையை சிந்தித்துப் பார்.
சி.ஜெயசங்கர்