காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாக சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் , தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் பிரதேச வாசிகள் தொழிற்சாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 33 வருட காலமாக தொழிற்சாலை இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பாதுகாப்பாக இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய பின்னர் திருட்டுகள் அதிகரித்துள்ளது.
மேலும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , இரும்பு திருட்டை தடுக்க பாதுகாப்பு குழுவொன்றை தாம் நியமித்துள்ள போதிலும் , திருட்டில் ஈடுபடும் பிரதேச வாசிகளுக்கும் , பாதுகாப்பு குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த கால பகுதியில் பெருமளவான இரும்புகள் திருடப்பட்டதுடன் , இரும்பு திருட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சில இராணுவத்தினரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.