ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார்.
இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய சுருக்கமான விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார்.
மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் பின்னரான செயன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பயிற்சி பெற்ற பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும், அதனால் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளமையின் பலன்களை அடைந்துகொள்ள இன்னும் இரண்டு வருடங்கள் அவசியப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஊழலுக்கு எதிரான கொள்கையை அமுல்படுத்துவதற்கு தமது அரசாங்கத்தின் முழு அரச பொறிமுறையும் முழுமையாக உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த செயற்பாடுகளை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
“அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் அறிமுகத்தினூடாக நலன்புரித் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியினால் விளக்கமளித்தார்.
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில் தேவையான நிபுணத்துவ உதவிகளையும் வழங்கும் என்று சமந்தா பவர் இதன்போது தெரிவித்துள்ளார்.