415
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்று தலா 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார் என குற்றம் சாட்டி, சட்டமா அதிபரினால், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது சிவாஜிலிங் கம் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தமையால் மன்றில் முன்னிலையாகவில்லை. அந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கும் மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் , அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , மன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாகி இருந்தார். அதனை அடுத்து அவர் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் , அவரது பிடியாணையை இரத்து செய்யுமாறும் , பிணை விண்ணப்பமும் செய்தனர்.
பிணை விண்ணப்பத்தினை பரிசீலித்த மன்று , சிவாஜிலிங்கத்தை தலா 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன் , வழக்கினை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அதேவேளை சிவாஜிலிங்கத்தை 2020ஆம் ஆண்டு கைது செய்த போது கைப்பற்றிய வாழைக்குற்றி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் சான்றுப் பொருட்களாக மன்றில் பாரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love