273
மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை புரிந்து கொள்கின்றமையினால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இந்தளவிற்கு பெருந்தொகையானோர் திரண்டு வந்து உங்களின் ஆதரவை வெளிப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறையாக இருக்கின்றது.
யாழ் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் நிர்வாகத்தினுள் மூக்கை நுழைத்து நான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அநாமதேய சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டன.
இவ்வாறான வசைபாடல்கள் சேறடிப்புக்கள் தொடர்பாக நான் அலட்டிக் கொள்வதில்லை. எனினும், பாடசாலை சமூகங்களினால் அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையிலேயே தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகின்றேன்.
இதேபோன்று பத்து வருடங்களுக்கு முன்னர் உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பிலும் தலையிட்டு தீர்த்து வைத்திருந்தேன். இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்
இக்கலந்துரையாடலில், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர்கள், அயல் பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்பின் நியாயத்தினை வெளிப்படுத்தினர். இதன்போது, பாடசாலையின் உட்கட்டுமான வசதிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
Spread the love