[இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்.]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் ‘எனக்குத் தெரிந்த ராஜீவ்’ (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர் தற்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் குறித்து விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘The Rajiv I Knew’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம், ராஜீவ் காந்தி ஆட்சியின் காலகட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவுத் துறை கொள்கை முயற்சிகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத் ராஜ் ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகிறது.
இதில் சர்ச்சைகள் என்ற பகுதியில் ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி விவகாரம், ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிராஸ்டாக் நடவடிக்கை, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட விவகாரம், போஃபர்ஸ் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன.
யாரையும் ஆலோசிக்காமல் ராஜீவ் எடுத்த முடிவு
இதில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார் மணிசங்கர் அய்யர். இந்திய அமைதி காக்கும் படையை அனுப்ப இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என்பது குறித்தும் ஒரு புதிய தகவலைச் சொல்கிறார் மணி சங்கர் அய்யர்.
“ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே,” என்கிறது இந்த நூல்.
அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. “அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது,” என்று கூறப்பட்டிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் இந்நூல் கூறுகிறது. “ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்,” என்று மணி சங்கர் அய்யர் தனது புத்தகத்தில் கூறுகிறார்.
Thanks – BBC