Home இலங்கை ‘அப்பு’ எனும் மட்டுநகரின் அற்புதமான கலைஞன்! து.கௌரீஸ்வரன்!

‘அப்பு’ எனும் மட்டுநகரின் அற்புதமான கலைஞன்! து.கௌரீஸ்வரன்!

by admin

மட்டுநகரின் நாடக அரங்க வரலாறு பன்முகத் தன்மைகள் கொண்டது.

அதில் நகைச்சுவை மேலோங்கிய மேடை நாடகங்கள் ஒரு வகை,

இந்த நாடகங்களை சமூக நாடகங்கள் எனவும் அழைப்பர்.

இந்த நாடகங்களுக்குப் பெரும்பாலும் எழுத்துரு இருக்காது மாறாக நாடகத்தில் வெளிப்படுத்த வேண்டிய கருப்பொருளையும் அதற்கான பாத்திரங்களையும் உரையாடல்களையும் ஒருவர் தீர்மானித்து அவற்றை உரிய நடிகர்களுடன் உரையாடி அவர்களின் புதிதளித்தல்களுடன் ஆற்றுகை செய்யும் முறைமை இந்நாடக உருவாக்கங்களில் நடைபெற்றுள்ளமை பற்றி அறிய முடிகின்றது.

மட்டுநகரின் வரலாற்றில் நண்டு நவரட்ணம், மாலா ராமச்சந்திரன், மங்களராஜா, சோதிநாயகம் முதலிய கலைஞர்கள் ‘தமிழ்க் கலா மன்றம்’ என்ற பெயரில் மேற்படி நாடகங்களை உருவாக்கி மேடையேற்றியுள்ளார்கள். (இதுபோன்ற வேறுபல நாடக மன்றங்களும் இயங்கியுள்ளன)

இந்தத் தமிழ்க் கலா மன்றத்தின் நாடகங்களால் கவரப்பட்டு மேலெழுந்த ஒரு நாடகக் கலைஞராக ‘அப்பு’ என்று அறியப்படும் திரு செ.சிதம்பரப்பிள்ளை அவர்கள் காணப்படுகின்றார்.

ஆரம்பத்தில் மாணவப் பருவத்தில் தான் கல்வி கற்ற அரசடி மகா வித்தியாலயத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் மன்றத்தில் நகைச்சுவை நாடகங்களை உருவாக்கி நடித்த இவர் அதைத் தொடர்ந்து அமிர்தகளி இளங்கதிர் நாடக மன்றமூடாகவும், இரா.தவராஜா அவர்களுடன் சேர்ந்தும் சமூக நாடகங்களை உருவாக்கி நடித்துள்ளார்.

இக்காலத்தில் ‘சனிமாற்றம்’, ‘தான் அறியாப்பாசை’, ‘ஜபாட் அன்னம்மா’, ‘போடியார் காதல் மோடியாப் போச்சு’, ‘எனக்குப் பிடிச்ச மாப்பிள்ளை’, ‘பாவம் பஞ்சாட்சரம்’ முதலிய நாடகங்களில் நடித்துள்ளார்,

1970 களில் இந்நாடகங்கள் உள்ளுர் இரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவையாக இருந்துள்ளன.

1975 இல் ‘மாமாங்கம் தமிழ்க் கலை மன்றம்’ என்ற பெயரில் தனியமைப்பாக ‘அப்பு’ அவர்கள் தனது நண்பர்களுடன் நாடகங்களை உருவாக்கித் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆற்றுகைகளை இந்நாடகக் குழுவினூடாக நடத்தியுள்ளமை பற்றி அறிய முடிகின்றது.

அப்புவின் நாடகக் குழுவில் யோகநாதன், விசுவேந்திரன், கஜேந்திரன், சந்திரா, ஹரல்சந்திரா, சுகிர்தா, கௌரி, காலஞ்சென்றவர்களான அம்புறோஸ்ஜீவா, நகுலேஸ், ஜீவராஜா, தங்கராஜா முதலிய கலைஞர்கள் பங்குபற்றி வந்துள்ளார்கள்.

மட்டுநகரின் பல்வேறு இடங்களிலும், வீரமுனை, அன்னமலை, மண்டூர், அக்கரைப்பற்று, சேனையூர், கிளிவெட்டி, வாழைச்சேனை, களுமுந்தன்வெளி, சந்திவெளி எனப்பல ஊர்களிலும் நாடகங்களை நிகழ்த்தி இரசிகர்களை மகிழ்வித்து வரும் ஓர் உள்ளுர்ச் சமூக நாடகக் குழுவாக அப்புவின் குழு இன்றுவரை விளங்கி வருகின்றது.

அப்புவின் நாடகங்களைப் பார்ப்பதற்கென்றே மிகுந்த ஆவலுடன் இரசிகர் கூட்டம் ஒன்று சேர்வதைக் காணலாம்.

விசேடமாக அப்புவின் நாடகங்கள் ஒவ்வொன்றும் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை அங்கதமான உரையாடல் உத்திகளுடாக வெளிக்காட்டுவதை அவதானிக்கலாம்.

இந்நாடகங்களில் பெரும்பாலானவை உள்ளுர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் இடம்பெறுபவையாகவே இருந்து வருகின்றன.

அப்புவின் நகைச்சுவை நாடகங்களில் அர்த்தச் செறிவுடனும் சந்தம் நிறைந்ததாகவும் அடிக்கடி கூறப்படும் கூற்றுக்கள் உள்ளுர் மக்களிடையே மிகவுஞ் செல்வாக்குப் பெற்றிருப்பதையும் அவதானிக்கலாம்.

உதாரணமாக ‘அஞ்சு மணிக்கு அடிச்சிதாம் திருந்தாதி எழும்பாமப் படுக்கிறானாம் இளந்தாரி’, ‘பூசாவில இருந்தாராம் பொன்னம்பலம் பொஞ்சாதி கொண்டு போனாவாம்; கிண்ணம்பழம்’, ‘நண்டு பூந்துதாம் பொந்துக்குள்ள வேட்டி பிஞ்சித்தாம் குந்தக்குள்ள’ எனும் கூற்றுக்களைக் கூறலாம்.

1970, 80 களில் உழைத்துக் களைத்த மனிதர்களையும், 1990 களில் போர்க் காலத்தின் பல்வேறு மனத்துயரங்களுடன் வாழ்ந்த மனிதர்களையும் சில மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்கவைத்து ஆற்றுப்படுத்தியவையாக அப்புவின் கற்பனையில் உருவான நாடகங்கள் விளங்கியிருந்தன எனலாம்.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஓர் அரச ஊழியனாகக் கடமையாற்றிய அப்பு, ஒரு தன்னார்வ நாடகக் குழுவினை உருவாக்கித் தொடர்ச்சியாக இயங்கும் கலைஞனாக மாத்திரமன்றி ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாகவும் மட்டுநகரில் பிரகாசித்தவர்.

ஆரம்பத்தில் சூட்டிங்ஸ்டார் எனும் கால்பந்தாட்டக் கழகத்திலும் பின்னர் சீலாமுனை யங்ஸ்டார் கால்பந்தாட்டக் கழகத்திலும் உள்ளுர் செவணசைட் போட்டிகளில் முன்னணி வீரனாக விளையாடியவர். மட்டுநகர் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தினூடாக அணிக்கு பதினொருவர் பங்குபற்றும் கால்பந்துப் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். கால்பந்தில் இவர் ஒரு கனவான் வீரன்.

இன்று 74 வயதிலும் ஓர் இளைஞனாகவே மிதி வண்டியில் தனது நாளாந்தப் போக்கு வரத்தினை மேற்கொள்கிறார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்களை உருவாக்குகிறார் உள்ளுர்க் கோவில்களில் நடித்து தானும் மகிழ்ந்து மற்றைய மனிதர்களையும் மகிழ்வித்து வாழ்கிறார்.

இன்றைய இளந்தலைமுறையினருக்கு அப்பு எனும் அற்புதமான கலைஞன் ஒரு முன்மாதிரியாக வாழ்கிறார்.

அவரை வாழ்த்துவோம்! கொண்டாடுவோம்!

து.கௌரீஸ்வரன்,
31.05.2024

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More