யாழ்ப்பாணத்தில் கீரிமலையில் அமைந்துள்ள கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்கவைரவர் ஆலயத்தின் வருடார்ந்த வேள்விப்பொங்கல் இவ்வருடம் நிகழ்கின்றது.
வேள்விப்பொங்கல்; முக்கிய தொன்மையான வழிபாடாகக் காணப்படுகின்றது. கவுணாவத்தை நரசிங்கவைரவர் ஆலயத்தில் தொடரந்தும் தலைமுறையாகக் கிடாக்களும். கோழிகளும் பலியிடப்படுகின்றன. இன்றைய சூழலில் வேள்விப்பொங்கல் நடைபெறும் முக்கிய கோயிலாகக் காணப்படுகின்றது.
வழிபாடு என்பது மக்கள் நம்பிக்கையுடன் மனிதர் ஆழ்மன உணர்வுடன் வெளிப்படுத்தலுடன் இணைந்தது. கோயில்த்தீர்த்தம், கோயில் மண் தெய்வத்தின் பகுதியாக நோய்த்தீர்க்கும் மருந்தாக மக்களால் நம்பப்படுகின்றது. கோயில் வெளி மக்களின் புனித வெளி. புனிதம் என்பது தூய்மை தீட்டு மட்டுமல்ல. அது நம்பிக்கை சார்ந்தது. கோயில்களில் வேள்விப்பொங்கல்களும் அவ்வாறே இடம்பெற்றன. நோய், பிணியில் இருந்து விடுபடுவதற்காக: தங்கள் வாழ்தலில் ஏற்படும் இடர்களைத் தடுக்க: தங்கள் உயிர்க்காக பிறிதொரு உயிரைப் பதிலீடாக பலியிடுதல் போன்ற நம்பிக்கையின் பின்னணியில் வேள்விப்பொங்கல் இடம்பெற்றுவருகின்றது.
ஆனால் பொதுவான வழிபாட்டு முறையினை உருவாக்கல் என்னும் நோக்கிலும் மிருகப்பலி மிருகவதையாகக் கருதப்பட்டு மக்கள் சார் நம்பிக்கையினை கருத்தில் எடுக்காது அதற்கான எதிர்ப்பு இடம்பெற்றது. அதிகமான கோயில்கள் வேள்விப்பொங்கல் நிறுத்தப்பட்டு சைவப்படையல் இடம்பெறும் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான சில குறிப்புக்களை பத்திரிக்கைச் செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அவை பின்வருமாறு,
பலியிடுதல் தொடர்பான கட்டுரை 2001 ஆனி 11 தினக்குரலில் வெளிவந்துள்ளது. அதில் பின்வருமாறு அமைகின்றது. “கருகம்பானை அந்திரானை கவுணாவத்தை நரசிங்கவைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் நூற்றுக்கனக்கான உயிர்கள் பலி” என்னும் தலைப்பில் இடம்பெற்றிருந்தது. கருகம்பனையில் இடம்பெற்ற பெரும் வேள்வியில் நூற்றுக்கனக்கான ஆட்டுக்கிடாக்களும் சேவல்களும் பலியிடப்பட்டபின்னர் மனித பாவனைக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது. மிருகப்பலி நடாத்தப்பட வேண்டாம் எனப்பல அமைப்புக்கள் போராட்டம் நடாத்திய போதிலும் எதுவுமே வெற்றியளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
மிருகப்பலிக்கு எதிரான சட்டம், இந்துமயமாக்கல் ஆகிய காரணங்களினால் கோயில்களில் வேள்விப்பொங்கல் நிறுத்தப்பட்டு சைவப் பொங்கலாக மாற்றப்பட்டது. இத்தகைய சூழலில் இன்றும் பல எதிர்ப்புகளின் மத்தியில் வேள்விப்பொங்கல் இடம்பெறும் கோயிலாக கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்கவைரவர் ஆலயம் காணப்படுகின்றது. தங்களது தொன்மையான வழிபாட்டுமுறையை பேணி வருகின்றனர். வேள்விப்பொங்கலினை மாற்றாமல் அவ்வழிபாட்டு முறையினைப் பின்பற்றி வருவதனுடன் கோயில்களில் இடம்பெறும் வழிபாடு தொடர்பான அறிவுறுத்தலை உள்ளுர்மொழிவழக்கில் அமைந்திருப்பதும் முக்கியமானது.
இக்கோயில் வழிபாடு தொடர்பாக வெளிவந்த மொழி வழக்கு முக்கியமானதாகக் காணப்பட்டது. உற்சவம், போன்ற சொற்களை தவிர்த்து விளக்கு வைப்பு, வேள்விப்பொங்கல் என மொழி அமைந்திருந்தது. அத்துடன் இதுவரை வேள்வியினைத் தடை விதிக்கும் வதிமுறையில் சுகாதாரவிதிமுறை என்பது ஒரு காரணமாகச் செயற்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டிற்கு மாற்றாக கோயில் அறிவுறுத்தல் பின்வருமாறு அமைந்திருந்தது. ‘வேள்விப்பொங்கல் தினத்தன்று கிடாய்கள் சேவல்கள் காணிக்கையாக்கி சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே வேள்விப்பொங்கல் இடம்பெறும்.’ என கோயில் வழிபாடு தொடர்பான அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மக்கள் சட்டம், சமய ரீதியான அழுத்தங்களை எதிர்கொண்டு தங்களுக்கான வழிபாட்டினை பின்பற்றுவதுடன் தங்களின் சுயமான வழிபாட்டில் இன்றுவரை வழிபடுவது முக்கியமானதாகும்.
கலாவதி கலைமகள்