Home இலங்கை ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது

ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது

by admin
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் தவறான வழிநடத்தல்களும் உணர்ச்சி பேச்சுக்களும் பெற்றுத்தந்தது அழிவுகளையும் வடுக்களையும் மட்டும்தான். இனி ஒருபோதும் அந்த நிலைக்கு எமது இனம் சென்றுவிடக்கூடாது.

1987 இல் தாம்பாளத்தில் வைத்து தரப்பட்ட ‘13 ஐ” கைநழுவ விட்டுவிட்டு இன்று வெட்கம்கெட்டதனமாக அதை முழுமையாக தருவீர்களா பாதியாக தருவீர்களா என தென்னிலங்கை அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் என்பதும் தேவையற்ற ஒன்றாகத்தான் நான் கருதுகின்றேன். ஆனால் தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஐக்கியம் என்ற போர்வைக்குள் தம்மை போர்த்திக்கொள்ள கடும் பிரயத்தனங்களை தேசியம் பேசும் தமிழ் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றனர்.  அதற்கான ஏற்பாடே இந்த பொது வேட்பாளர் பேச்சும் இருக்கின்றது.

பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை பொறுப்பெற்று அதை படிப்படியாக முன்னேற்றம் காணச் செய்துகொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் சரியானதாகவே இருக்கின்றது என நான் எண்ணுகின்றேன்.

அதனால் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவரை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லதென் நான் நினைக்கின்றேன்..

இந்நிலையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திஸநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து சென்றுள்ளனர்.

இன்று அனைத்தும் கைமீறிச்சென்றுவிட்ட நிலையில் அவர்களிடம் 13 ஆ, அதில் பாதியா அல்லது கால்வாசியா என பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது எமது கைகளில் ஏற்கனவே இருக்கின்றது

இதேவேளை எதனையும் தேசிய நல்லிணக்கம் மற்றும் சலசலப்பற்ற பொறிமுறைகளூடாக சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

அவ்வாறு நாம் பலவற்றை சாதித்தும் காட்டியிரக்கின்றோம். எனவே அடுத்துவரும் காலங்களில் எமக்கு மக்கள் பலம் மேலும் அதிகளவாக கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தை கோடிட்டுக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் எவரும்  அனுமதிக்கப்படவில்லை.

நல்லாட்சியில் கடலட்டை குஞ்சு உற்பத்திக்காக  அனுமதிக்கப்பட்ட சீன நிறுவனமும்,  தற்போதை வல்லாட்சி காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், நூறு வீதம் யாழ் மாவட்டத்தினை சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பான பொருளாதார நன்மைகளை வழங்கிவரும் கடலட்டை உற்பத்திகளை மேலும் விரிவாக்கம் செய்து முன்கொண்டு செல்வதற்கு, பண்ணையாளர்கள் நடைமுறை ரீதியாக உணர்ந்து கொண்ட சவால்களுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பொய்களுக்கு மக்கள் இடங்கொடுக்காது வெளிப்படையான உண்மைகளை இனங்கண்டு எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அவசியமானதுமாகும்.

எமது மக்களே எமது பிரதேசங்களின் வளங்களை பயன்படுத்தி உச்ச பயன்களை பெறவேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்தார்.

  குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், வேலணை பிரதேச செயலர் சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More