மாலோன் மருகனைக் கவர்ந்த திருமுருகாற்றுப்படை
“ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனுக்குத் தலைக்கு எண்ணெய் இடுவதென்றால் ஒரே வெறுப்பு. கிழமை நாள்களிலே தப்பிவிட்டாலும் சனிக்கிழமை காலைகளில் அவன் தப்பிக்கொள்வதென்பது அரிது. (அருமை இன்மைமேல் நின்றது – பரிமேலழகர்) அவன் தந்தை இடது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். அன்றும் ஒரு சனிக்கிழமை. கையில் எண்ணெயுடன் வந்த தந்தை, ‘இதென்னடா! தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானம்போல் இருக்கிறதே உன்தலை ‘ என்றார். பையனுக்கு ஏதோ விளங்கியது மாதிரியும் விளங்காதது மாதிரியும் ஒரு மயக்கம், ஆனால் அந்தத் தொடர் அவனுக்குப் பிடித்துவிட்டது. எண்ணெய் இடப்படுவதை அவன் மறந்துவிட்டான். ‘என்னப்பா சொன்னீர்கள்’ என்று கதை கேட்கும் ஆர்வத்தோடு உட்கார்ந்து விட்டான். ‘கார்காலத்தில் – ஆவணி, புரட்டாதி மாதங்களில் – முதன்முதற் பெய்த மழையால் நனைந்த நிலம்போல உன் தலை எண்ணெய்பட்டதும் காட்சி தருகிறதடா’ என்றார் தந்தை.
பையனுக்கு அந்தத் தொடரில் ஏதோ கவர்ச்சி பிறந்து விட்டது. ‘இது எங்கே வருகிறது’ என்று கேட்டான். ‘திருமுருகாற்றுப்படை என்றொரு நூல், அதிலே வருகிறது’ என்றார் தந்தை. ”அதை நான் படிக்கவேணும்’ – இது பையன். தந்தை சிரித்தார்……..
எண்ணெய் இட்டுக்கொள்ளத் தயங்கிச் சனிக்கிழமை என்றொரு நாளே வாரத்தில் இருக்கக்கூடாதென்று நினைத்த பையன் அன்றிலிருந்து சனிக்கிழமைகள் எப்போது வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான். சனிக்கிழமை காலையில் ‘ஏன் இன்னும் எண்ணெய் இடவில்லை’ என்று கேட்கவும் ஆரம்பித்துவிட்டான் அந்தச் சிறுவன் வேறுயாருமல்லன்: உமாமகேசுவரன்.
எதையும் சுவையாகச் சொல்லி இரசிக்கச் செய்வதில் அப்பாவுக்கு(கதிரிப்பிள்ளை) நிகர் அப்பாதான். அதே வேளையிற் பெரிய நூல்களைக்கூடப் படிக்கவேண்டும் என்று சிறுவரும் ஆர்வமுறத்தக்க வகையில் அறிமுகம் செய்துவைப்பதில் அவர்கள்போற் பிறிதொருவரை நாங்கள் கண்டதில்லை.”
– இது பண்டிதர் சி. கதிரிப்பிள்ளையின் நினைவு மலருக்கு உமாமகேசுவரன் ‘அப்பா எனும் தெய்வம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் அறிமுகம்.
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையானது. ஒரு கலைஞனது படைப்புக்களில் ஈடிணையற்ற, மிகச் சிறந்த ‘மெத்தத் திறமான’ படைப்பை ஆங்கிலத்தில் மக்னம் ஒபஸ் (magnum opus) என்று சொல்வார்கள். நக்கீரர் இயற்றிய நூல்களில் திருமுருகாற்றுப்படையே ‘மக்னம் ஒபஸ்“ என்று ஆசிரியர் உமாமகேசுவரன் கூறுவார்.
சிவதொண்டன் நிலையத்து யோகசுவாமி திருமுருகாற்றுப்படையை சிலரைப் படிக்குமாறு சொன்னதை அறியக் கிடைத்தது. பொதுவாக எந்த ஒரு பதிகத்திலும் அதன் நிறைவில் அந்தப் பதிகத்தைப் பாடுவதால் கிடைக்கும் பலனை அதன் ஆசிரியர் பாடுவது வழமை.
சிவதொண்டன் செல்லத்துரை சுவாமிகள் அருளாளர்களின் பாடல்களில் சிலவற்றைக் கூறி(கந்தர்கலி வெண்பா, திருமுருகாற்றுப்படை) படித்து வாருங்கள் என்று சொன்னால் அந்த வாசகம், அந்தப் பதிகம் மந்திரத்தை நிகர்த்தது என்று சிவதொண்டன் நிலையத்துப் பிள்ளைகள் போற்றி பாராயணம் செய்வர். செல்லத்துரை சுவாமி ஒரு பதிகத்தை, திருமுறையைப் படிக்கச் சொன்னால் அதற்கு சத்தி அதிகம். அதைப் பாராயணம் செய்வது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கவல்லது என்றும் சொல்வார்கள். திருமுருகாற்றுப்படையைப் படிக்கப் படிக்க அன்பு பெருகும் என்று எங்கள் யோகர் சுவாமி சொன்னதையும் அதனைப் பாடி நன்மக்கட் பேறடைந்த செய்தியையும் நாம் அறிந்திலோம். யோகசுவாமியின் நற்சிந்தனையில் ஒரு வாசகம் “கீரன் சொன்ன வாசகங்கேட்டுப் பேரன்புற்றுப் பிணியை நீக்கி” என்றுளது.
குன்றுதோறாடும் குறிஞ்சிக்கிழவன், குமரக்கடவுளை அன்பினால் வழிபட்டு, “நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி” அருளைப் பெற நறுமணங் கமழும் இனிய சொற்களால் நக்கீரன் கட்டிய மாலை – ‘முருகாற்றுப்படை’ க்கு நிகரேது.
மிகச்சிறந்த நினைவாற்றல்
பண்டிதர் உமாமகேசுவரன் எந்த ஒன்றையும் மேற்கோள்காட்டும் போது மூலத்தை அதாவது மூல நூலைப் பார்த்துத்தான் அதனை மேற்கோள் காட்டுதல் வேண்டும். நினைவிலிருந்து சொல்லக் கூடாது என்றும் மனித மூளையின் நினைவாற்றலை விட எப்போதும் சரியாகச் சொல்லக் கூடியவை நூல்கள் தான் என்றுங் கூறுவார்.
உமாமகேசுவரனிடம் மிகச் சிறந்த நினைவாற்றல் இருந்தது. இளமையிற் கல்வி சிலையில் எழுத்துப்போல அவரிடம் சங்கப் பாடல்கள் நினைவிலிருந்தன. அப்பா(கதிரிப்பிள்ளை) இருதடவை பாடலைச் சொல்லி பொருளை விளங்கப்படுத்த பாடல் நினைவுக்கு வந்து விடும் என்பார். இத்தகைய கற்பித்தல் ஆற்றல் உமாமகேசுவரினிடமும் இருந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் ஆசிரியரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் கோண்டாவிலில் வசித்தார். சிறு பிள்ளைகள் இருவருக்குப் பாடம் எடுத்தார். அவர்களுக்கு இராமச்சந்திரகவிராயர் இயற்றிய காணாமல் போன பாக்குவெட்டிப் பாடலைச் சொல்லிக் கொடுத்தார். அவர் பாடலைச் சொல்லிக் கொடுத்து, பொருளை விளங்கப்படுத்தியதும் அந்தப் பிள்ளைகள் பாடலைப் பார்க்காமலேயே முழுமையாக ஒப்புவித்துப் பொருளையும் சொன்னார்கள்!
விறகு தறிக்க கறி நறுக்க
வெண்சோற் றுப்புக் கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த தென்றால்
நாலா றாகப் பிளந்து கொள்ளப்
பறகு பறகு என்றே சொறியப்
பதமா யிருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் போவது ண்டோ?
எடுத்தீ ராயிற் கொடுப்பீரே
இலட்சியமும் அதை அடைவதற்கான வழியும்
2006 ஆம் ஆண்டு ஒரு நாள் தெகிவளை உவின்சர் அவனியுவில் ஆசிரியரைச் சந்திக்கச் சென்றபோது இலட்சியத்தை விட இலட்சியத்தை அடைவதற்கான வழிதான் மிக முக்கியம் என்று கூறினார். இலட்சியத்தை, இலக்கைத் தவறவிடலாம். ஆனால் அதை அடைவதற்கான வழியைத் தவற விடக்கூடாது என்றார். இதற்குத் திருக்குறள் ஒன்றைக் கூறி மிகவிரிவான விளக்கம் அளித்தார்.
ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
மேலே குறள் 656 இல் கூறப்பட்டுள்ள கருத்தை விளக்கிய போது தமிழரது அறத்தைப் பற்றியும் பொதுவான வடமொழி நூல்கள் கூறும் அறத்தையும் மேற்குலகின் அறத்தையும் பரிமேலழகரது உரையின் விசேடத்தையும் எடுத்துக் காட்டினார்.
பெற்றோரும் மனைவியும் பிள்ளைகளும் பசியால் வாடுமிடத்து துயரின் எல்லைக்குச் சென்று அதைத் தாங்காது அறன் அல்லாத வழியிற் சென்றாயினும் அவர்களது பசியைப் போக்குதல் தகும் என்று அறநூற் பொதுவிதி கூறுகின்றது. ஆனால் திருக்குறள், தமிழ் அறநூல்கள் அவ்வாறு கூறவில்லை என்றார்.
மேற்கு உலகில் பயனோக்குக் கோட்பாடு அல்லது இறுதிநிலைப்பயன்பாடு (Utilitarianism) என்ற கொள்கை 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைகிறது. விக்டர் ஹ்யூகோ பிரெஞ்சு மொழியில் எழுதிய லே மிசரபில் (Les Misérables,) என்ற நாவல் 1872 இல் வெளிவருகிறது. இந்த நாவலின் பிரதான பாத்திரம் ஜாம் வல்ஜான் (ஜீன்வல்ஜான் – Jean Valjean) பட்டினியால் வாடும் தனது சகோதரியின் பிள்ளைகளின் பசிபோக்க தவறான வழியில் ரொட்டிகளை பெறமுற்படுகின்ற போது கைது செய்யப்பட்டு பின்னர் 19 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுகிறது. ஐரோப்பிய சமூகத்தில் தவறான வழியில் ரொட்டியை பெற்றமை நியாயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாவலை சுத்தானந்த பாரதியார், ‘ஏழைபடும்பாடு’ என்ற பெயரில் பிரேஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.
மேலுள்ள திருக்குறள், தன்னைப் பயந்தவள் பசியோடிருப்பதைக் காணும் வறியவனாயினும் அத்தாயின் பசியைத் தணித்தற் பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வழியிற் சென்று தாயினது துன்பத்தைப் போக்காதிருப்பாயாக என்று அறம் உரைக்கின்றது.
தாயின் பசியைப் போக்குவது இலட்சியமாயிருப்பினும் நல்லவழியிற் சென்று தான் அதனை நீக்க வேண்டும் என்று சொல்வார். அறமல்லாத வழியில் எங்களது இலட்சியத்தை அடைய முற்படக் கூடாது. இது அனைத்துக்கும் பொருந்தும் என்பார்.
உமாமகேசுவரன் தமது தந்தையின் (கதிரிப்பிள்ளையின்) நினைவு மலருக்கு எழுதிய கட்டுரை பின்வரும் வாசகங்கள், சுலோகங்களுடன் நிறைவடைகிறது:
“மூப்பென்பதொன்றில்லை; பிணியென்பதொன்றில்லை; மரணமென்பதொன்றில்லை; இளமை சாசுவதமானது; நாம் அமரத்துவம் எய்தியவர்கள் என்ற நினைவுடன் கல்வி செல்வம் என்பவற்றை எய்த இடையறாது முயல வேண்டும்.
மரணம் எந்தக் கணமும் எமை நெருங்கலாம். காலன் தலைமயிரிற் பிடித்திழுத்துச் செல்லக் காத்திருக்கிறான் என்ற நினைவுடன் அன்றறிவாமென்னாது – அறஞ்செய விரும்ப வேண்டும். – இவை அப்பா அடிக்கடி கூறும் அறிவுரைகள்.
நீயே என் தாய் நீயே என் தந்தை நீயே என் சுற்றம்; நீயே என் தோழன்; நீயே என் வித்தை; நீயே என் பெறலருந் திரு; அனைத்தும் நீயே; நீயே என் தேவதேவன்.
என்ற பொருள் தரும் சுலோகம் ஒன்றைச் சொல்லி உருகுவது அப்பாவின் வழக்கம். அப்பா எனும் தெய்வத்தை நினைக்கும் போதெல்லாம் அச்சுலோகம் தான் நினைவில் எழுகிறது.”
(தொடரும்)