யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்
ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு வடமாகாண ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வட மாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஆளுநரால் தெல்லிப்பளை பகுதியில் உள்ள மகளிர் இல்லம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் வெளியான செய்தியினை யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று பொய்யான செய்தி என செய்தி வெளியிட்டு இருந்த நிலையிலையே ஆளுநர் இந்த அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.