யாழ்ப்பாணத்தில் உள்ள இசை ஆர்வலர்கள், இசைத்துறையில் கல்வி கற்கும் மற்றும் இசைத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு யாழ். இசைக்கருவியை இசைக்க பழகுவதற்கு தான் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நோர்வேயை சேர்ந்த கலா ரெஜி என்பவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ். இசைக்கருவியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக யாழ். இசைக்கருவியே விளங்குகின்றது.
யாழ். இசைக்கருவியை பற்றிய வரலாறுகளை பல ஆண்டுகளாக தேடி அறிந்தே , யாழ். இசைக்கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.
இந்தியாவில் கேரளாவில் அங்குள்ள கலைஞர் ஒருவரினால் ஒரு யாழ். இசைக்கருவியை உருவாக்கினேன். அதே போன்று தென்னிலங்கையில் ஒரு கலைஞர் ஊடாக மற்றுமொரு யாழ். இசை கருவியை உருவாக்கியுள்ளேன்.
இதேபோன்று 10க்கும் மேற்பட்ட யாழ்.இசை கருவியை உருவாக்க உள்ளேன்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த எமக்கு யாழ் இசைக்க தெரியாமல் இருப்பது வெட்ககேடாக உள்ளது. யாழ்.பொது நூலகத்தில் உள்ள யாழ். இசைக்கருவியை பார்த்த வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இதனை யாரவது இசைப்பார்களா ? என வினாவினார். எவருக்கும் அதனை இசைக்க தெரியவில்லை.
அதனால் யாழ் இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு யாழ். இசைக்கருவிகளை வழங்கி அங்குள்ள மாணவர்களுக்கு அதனை கற்றுக்கொடுக்க முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன். தற்போது 12 மாணவர்களும் ஒரு விரிவுரையாளரும் அதனை கற்க ஆர்வமாக உள்ளனர்.
தொடர்ந்து பல்கலைக்கழத்திற்கு வெளியே யாழ்.இசைக்கருவியை கற்க விரும்புவர்களுக்கு அதனை கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
முதல் கட்டமாக வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை கொண்டு சூம் ஊடாக இங்குள்ள மாணவர்களுக்கு இசை நுட்பங்களையும் , யாழ். இசைக்கும் நுட்பங்களையும் கற்றுக்கொடுக்க கூடியவாறான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இங்கு யாழ் இசைக்கருவியை கற்று தேர்ந்தவர்களை சர்வதேச இசை விழாக்களில் பங்கேற்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அழிந்து போயுள்ள இசைக்கருவியை மீண்டு எடுத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே எனது நோக்கம். குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு யாழ். இசைக்கருவி இசைக்க தெரிந்து இருக்க வேண்டும் அதற்காகவே பல சவால்களுக்கு மத்தியில் இவற்றை ஆரம்பித்துள்ளேன் என மேலும் தெரிவித்தார்.