மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் , கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதி ஒன்றை சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். . படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது – 37) மற்றும் ஏ. ஆரோக்கியநாதன் (வயது – 37) என தெரிய வந்துள்ளது.
கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்த பொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர்.
எனினும் மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்ற நிலையில் குறித்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.