மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி ஏலத்தில் தலையிட்டதாகவும், அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு பில்லியன் ரூபா கணக்கான இலாபம் ஈட்ட உதவுவதற்காக உள் தகவல்களை கசியவிட்டதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளத நிலையில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்பான விடயங்கள் கண்டறியப்பட்ட போதிலும், சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற மகேந்திரன், திருமணத்தில் கலந்துகொள்வதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், நீதிமன்றங்களில் முன்னிலையாகத் தவறியதால், அது குறித்த சட்டப்பூர்வ செயல்முறையைத் தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது