கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (07) காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை சரியான முறையில் தென்படாததால் விமானங்கள் மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகியவற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-881 விமானம் , இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05.05 மணியளவில் வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-174 விமானம் ஆகியன மத்தள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டுளளன.
அத்துடன் , துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து காலை 6:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-730, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில், அந்த விமானங்களில் இருந்த பயணிகள் அங்கு தரையிறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.