தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். உயிாிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவரான ஜெயச்சந்திரன், தனது மென்மையான குரலால் இசை ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 1967 ஆம் ஆண்டு, பி. வேணுவின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜெயச்சந்திரன், பின்னர் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல அழகான பாடல்களைப் பாடியுள்ளார்.
1972 ஆம் ஆண்டில், ‘பணிதீராத்த வீடு’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதைப் பெற்றுள்ளாா். இளையராஜா இசையில் பாடிய ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
அதேபோன்று இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் இவர் பாடிய ‘கத்தாழம் காட்டுவழி’ பாடல் மிகவும் பிரபலமானது. இதற்கு முன்பே, ரகுமானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைத்த ‘பெண்படா’ படத்திலும் ஜெயச்சந்திரன் பாடியுள்ளாா்.
விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தின் ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடல் உட்பட ‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’, ‘வண்டி மாடு எட்டு வச்சி’, ‘இது காதலின் சங்கீதம்’, ‘காளிதாசன் கண்ணதாசன்’, ‘கொடியிலே மல்லிகைப்பூ’, ‘அந்திநேர தென்றல் காற்று’ போன்ற பல பாடல்கள் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான பாடல்களாகும். ஜெயச்சந்திரனின் மென்மையான குரல் மற்றும் அழகான பாடல்கள் இன்றும் பலரின் இதயத்தை கொள்ளை கொண்டு வருகின்றன. அவரது பாடல்கள் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் பரவலாக கேட்கப்படுகின்றன