தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
விரைவாகக நடைபெற்று வரும் இந்த பணிகளுக்கு இடையே தோமலபென்ட்டா என்ற பகுதியில் சுரங்கம் கட்டுமானப் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திட்ட பொறியாளர் மனோஜ் குமார், கள பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஊழியர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ், சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆபரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆபரேட்டர் குர்பிரீத் சிங் ஆகியோர் சிக்கியிருந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் உராணுவம், கடற்படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். அத்துடன் 2023 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவை சேர்ந்த 6 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடுவதற்காக அதிநவீன ரோபோடிக் கமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் வரவழைக்கப்பட்டதுடன் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த மோப்ப நாய்களும் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டன.
இந்த நிலையில், மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பின்னா் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது. அதிநவீன சிறிய ரக டிரோன் மூலம் அவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இடற்பாடுகளை அகற்றி அவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.