கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக செயற்பட்ட 59 வயதான மார்க் கார்னி, ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சுமார் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் லிபரல் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் மார்க் கார்னி 86 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளாா்.
மார்க் கார்னியின் பிரதான போட்டியாளராக நிதியமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் காணப்பட்டார். கனடாவுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக போரை அறிவித்துள்ள பின்புலத்தில் புதிய பிரதமர் தெரிவு இடம்பெற்றுள்ளது..
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக கனடா அனைத்து அமெரிக்க பொருட்கள் மீதும் விதித்திருந்த வரி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரதமர் தெரிவின் பின்னர் உரையாற்றிய போது மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் லிபரல் கட்சி தேர்தலை எதிர்க்கொள்ளவுள்ளது. அரசியல் பின்புலம் இல்லாத நபரொருவர் கனடாவின் பிரதமராக பதவியேற்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
9 வருடங்களாக கனடாவின் பிரதமராக செயற்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ, சொந்த கட்சியின் அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்ப்ிடத்தக்கது