வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க இன்று (17) மறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை சட்டத்தின்படி செயல்படுத்துமாறும் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதியரசர்களை கொண்ட, நீதியரசர் (செயல்பாட்டுத் தலைவர்) முகமது லாஃபர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாத்தறை நீதவான் பிறப்பித்த பிடியாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அத்துடன், வழக்கு கட்டணமாக 10 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.