யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட 18 காணி உரிமையாளர்கள் தமது நிலங்களை மீட்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏற்கனவே சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரைக்குள், தற்போது புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிா்வரும் ஜனவரி 3-ஆம் திகதி புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சிலையினை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விகாரை முன்பாகப் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என நயினாதீவு நாக விகாராதிபதியே ஒப்புக்கொண்டுள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
“புத்தர் ஒருபோதும் மக்களின் காணியை ஆக்கிரமிக்கச் சொல்லவில்லை” என அவர் கூறியுள்ளதை மக்கள் ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளனர். இன்று தையிட்டியில் நடப்பது நாளை உங்கள் வீடுகளிலும் நடக்கலாம், வவுனியாவிலும் இதுபோலவே புதிய சிலைகள் முளைக்கின்றன” என இந்த திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு குறித்து மக்கள் எச்சரித்துள்ளனர்.
விகாரை கட்டும்போது எங்கே போனீர்கள்?” எனக் கேட்பவர்களுக்குப் பதிலளித்த மக்கள், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தின் துணையுடன் இது கட்டப்பட்டபோது எம்மால் தடுக்க முடியவில்லை, ஆனால் இப்போது தடுக்க முன்வராதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இதற்கு எதிா்ப்புத் தொிவித்து ஜனவரி 03, 2026 அன்று புதிய புத்தர் சிலை நிறுவுவதைத் தடுத்தல் மற்றும் காணி உரிமையை நிலைநாட்டல் போன்ற நோக்கங்களுக்காக தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போரட்டம் மேற்கொள்ளவுள்ளோம்.
தற்போது மீண்டும் ஒரு புத்தர் சிலையை வைப்பதற்காக வருகிறார்கள் இப்பவும் நாங்கள் கேலிப் பேச்சுகளும் கட்சிகளை வசை பாடுவதையும் விடுத்து எமது இனத்தைக் காக்க ஒன்றினைந்து எதிர்ப்பினை வெளியிட வருமாறு அனைவரையும் அழைக்கிறோம் என தெரிவித்தனர்.

