141
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற கும்பலை யாழ்ப்பாணம் காவல்துறையினா் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அரியாலை வீதியில் சென்ற பெண்ணைத் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து, சிசிடிவி (CCTV) மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சங்கிலியைப் பறித்த இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய இருவர் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில்தான் அதிக விலை கொண்ட அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தவணை முறையில் (Leasing) வாங்கியுள்ளனர். அதற்குரிய மாதத் தவணைக் காசை (Installment) கட்டுவதற்குப் பணம் இல்லாத காரணத்தினாலேயே இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கைதானவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய நவீன மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஆள்நடமாட்டம் குறைந்த வீதிகளில் செல்லும் போது அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Spread the love

