225
மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்பஸ்டீனுக்குச் (Jeffrey Epstein) சொந்தமான நியூ மெக்சிகோ பண்ணை வீட்டில் (Zorro Ranch), மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் “புதைகுழி போன்ற” இடங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுமக்களில் ஒருவர், தான் 2020ஆம் ஆண்டு அந்தப் பண்ணைக்குள் சென்றபோது எடுத்த புகைப்படங்களை மாநில சட்டமியற்றுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
பண்ணை நிலத்தில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அங்கிருந்த உடல்கள் அகற்றப்பட்டது போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.
புதைகுழி போன்ற இடங்கள் தவிர, பண்ணை வீட்டின் வெளிப்புறம், அங்கிருந்த ஒரு வெள்ளை நிறக் கூடாரம் (Yurt), மற்றும் அதற்குள் இருந்த சில சிலைகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 16 அன்று இந்தத் தகவல்கள் மாநிலப் பிரதிநிதிகளான ஆண்ட்ரியா ரொமெரோ மற்றும் மரியானா அனாயா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் நியூ மெக்சிகோ நீதித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் கைல் ஹார்ட்சாக் கூறுகையில், இந்தத் தகவல்கள் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிலும், எப்பஸ்டீன் மற்றும் அவரது தோழி கிஸ்லெயினின் உத்தரவின் பேரில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக ஒரு மர்ம மின்னஞ்சல் வந்திருந்தது.
பெப்ரவரி மாத இறுதியில் இருந்து நியூ மெக்சிகோ அதிகாரிகள் இந்தச் சோரோ பண்ணையில் மீண்டும் தேடுதல் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் உள்ள நீதித் துறை கடந்த ஜனவரியில் வெளியிட்ட கோப்புகளில் இப்பண்ணை பற்றிய குறிப்புகள் இருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அமெரிக்கக் காவற்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளன.
Spread the love

