172
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் (DHS) முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ‘சேவ் அமெரிக்கா’ (SAVE America Act) சட்டத்தை எதிர்க்கட்சியினர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முறையான அடையாள அட்டை (Voter ID) மற்றும் குடியுரிமை சான்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற கடுமையான விதிகளைக் கொண்ட ‘SAVE America Act’ சட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே அமைச்சகத்தைத் திறக்க ஒத்துழைப்பேன் என அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினரை “நாட்டை அழிக்கும் தீவிர இடதுசாரிகள்” என விமர்சித்துள்ள அவர், இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
பிப்ரவரி 14 முதல் நீடிக்கும் இந்த அமைச்சக முடக்கத்தால், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக (TSA) அதிகாரிகள் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் குடியுரிமை அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சியற்ற ‘ICE’ அதிகாரிகளை விமான நிலையங்களில் பணியமர்த்துவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க செனட் சபையில் இதற்கான விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், குடியரசுக் கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இந்த முடக்கம் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love

