Home இலங்கைதிருகோணமலை வைத்தியசாலையில் சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணிநீக்கம் –

திருகோணமலை வைத்தியசாலையில் சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணிநீக்கம் –

by admin

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரண்டு வைத்தியர்களின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது இந்தச் சோகமான மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தச் சமயத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இச்சிசு உயிரிழந்துள்ளது.  இச்சம்பவம் குறித்துச் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் உத்தரவின்படி  வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்கோயியல் விசேட நிபுணர் (Obstetrics and Gynaecology Specialist) மற்றும்  முதுநிலை வதிவிட மருத்துவ அதிகாரி (Senior Resident Medical Officer)  ஆகிய இருவரின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன:

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் ஏதேனும் குற்றவியல் குற்றங்களை (Criminal Offence) இழைத்துள்ளனரா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது எனவும் வறிழைத்தவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார்.

 

வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமையான சுகாதாரச் சேவையைப் பாதிக்கக் கூடாது என்பது நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும். திருகோணமலையில் ஒரு பிஞ்சுயிரின் மரணத்திற்கு வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. விசேட நிபுணர் மட்டத்திலான வைத்தியர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பொறுப்புக்கூறல் (Accountability) வலுப்படுத்தப்படுவதைக் காட்டுகிறது. இந்தப் புலனாய்வு விசாரணையின் முடிவுகள், எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்களின் போது அவசரச் சிகிச்சை முறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒரு தெளிவான வழிகாட்டலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TrincomaleeHospital  #InfantDeath  #DoctorsSuspended #HealthMinistrySL  #DrNalindaJayatissa

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More