47
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினரால் கடந்த மே முதலாம் திகதி நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்திற்காக, யாழ். நெடுந்தூர பேருந்து நிலைய வளாகம் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களினால் கடந்த 27.04.2026 அன்று யாழ். மாநகர முதல்வரிடம் உத்தியோகபூர்வமாகக் கடிதம் மூலம் அனுமதி கோரப்பட்டிருந்தது. மே முதலாம் திகதி மாலை 3.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை பேருந்து நிலைய வளாகத்தைப் பயன்படுத்தவும், அங்கு வரும் பொதுமக்களுக்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளைப் பயன்படுத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்ததுடன், இதற்காக மாநகர சபை விதிக்கும் கட்டணங்களைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், யாழ். மாநகர முதல்வர் எவ்வித கட்டணங்களையும் அறவிடாமல், பேருந்து நிலைய வளாகத்தையும் அதனுடன் இணைந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் இலவசமாகப் பயன்படுத்துவதற்கு விசேட அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மே தினக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மறுநாள் மேற்கொள்ளப்பட்ட வளாகச் சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் மலசலகூடத் தூய்மையாக்கல் போன்றவற்றுக்கான செலவீனங்களையும் மாநகர சபையே முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
ஆயினும், கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களின் மேலதிகத் தேவைக்காக வழங்கப்பட்ட குடிநீருக்கு மாத்திரம் மாநகர சபையினால் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இதன்படி, தலா 1000 லீட்டர் கொள்ளளவு கொண்ட இரு குடிநீர் தாங்கிகளுக்கான வாடகை, 2000 லீட்டர் குடிநீருக்கான கட்டணம், சேவைக்கட்டணம் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளடங்கலாக மொத்தமாக 9,900 ரூபாய் மாத்திரம் தேசிய மக்கள் சக்தியினரிடம் இருந்து மாநகர சபையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதான நெடுந்தூர பேருந்து நிலைய வளாகம் அரசியல் கூட்டத்திற்காக முழுமையாகப் பயன்படுத்தப்பட்டமையால், அன்றைய தினம் இரவு கொழும்பு நோக்கிப் பயணிக்கவிருந்த சொகுசுப் பேருந்துகள் மற்றும் ஏனைய நெடுந்தூரப் பேருந்துகள் அனைத்தும் வழக்கமான இடத்திற்குப் பதிலாக வேறு வேறு தற்காலிக இடங்களில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, முன்கூட்டியே பயணப் பதிவுகளை மேற்கொண்டு கொழும்பு செல்ல வருகை தந்த பயணிகள், இருள் சூழ்ந்த வேளையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களை அறியாது, அவற்றைத் தேடி அலைந்து பெரும் அசௌகரியங்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

