ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’வுக்குச் சாதகமாகச் செயற்பட ரூபாய் 20 கோடி இலஞ்சம் கோரிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சரின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்றைய திகதியில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவருமே இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்களாவர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ‘ஹரக் கட்டா’ காவற்துறையினரினால் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பது, அவரது தடுப்புக் காவல் உத்தரவை நீக்குவது, பூசா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையிலிருந்து சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றுவது மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பது ஆகியவற்றுக்கு உதவுவதாகக் கூறி இந்த இலஞ்சத் தொகை கோரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சந்தேகநபர்கள் மூவரும் ஒரே விமானத்தில் டுபாய் சென்று, அங்கு தங்கியிருந்த ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிகா மதுவந்தி மற்றும் அவர்தம் சகாக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது முதற்கட்டமாக ரூபாய் 50 கோடி கோரப்பட்டு, பின்னர் அது 20 கோடி ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதில் முன்பணமாக முதற்கட்டமாக 10 கோடி ரூபாயும், பின்னர் மேலும் 2 கோடி ரூபாயும் என மொத்தம் ரூபாய் 12 கோடி பணம் ‘உண்டியல்’ முறை ஊடாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான ரகசிய முறைப்பாட்டை அடுத்து நீண்டகாலமாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை மேற்கொண்டனா் அதனைத் தொடர்ந்து அவர்கள் இன்றைய திகதி (ஜூலை 03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
#RakithaRajapakse #CharithAbeyasinghe #HarakKatta #ColomboMagistratesCourt #SriLankaNews #LankaPolitics #CIABOC #BriberyCase #UndiyalScam #SriLankaCrime #BreakingNewsLK #lka

