38
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் அருகே உள்ள கிரேட் டென்ஹாம் (Great Denham) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பெட்ஃபோர்ட்ஷையர் காவல் துறையினர் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) உள்ளே சென்றபோது, அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகள்கள் என மூவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் நோதாபோ சாண்டில் சுமா (Nothabo Zandile Tshuma – 42) மற்றும் அவரது மகள்களான நடாலி (Natalie – 15), நாலா (Nala – 5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்களை வெளியில் காணவில்லை என அண்டை வீட்டாரால் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்தே காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த கொடூரமான முக்கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, உயிரிழந்த பெண்ணின் கணவரும் குழந்தைகளின் தந்தையுமான டொடானா மகாநயிசி சுமா (Ndodana Mkhanyisi Tshuma – 45) என்பவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ‘மார்க்’ (Mark) என்றும் அழைக்கப்படும் இவர், சடலங்கள் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) அன்று பிரித்தானிய கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி ஹீத்ரோ விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் தற்போது சிம்பாப்வே நாட்டில் இருக்கக்கூடும் என நம்பப்படும் நிலையில், அவரது சிசிடிவி (CCTV) காட்சியையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.
“மார்க் சுமா சனிக்கிழமை நாட்டை விட்டு வெளியேறி சிம்பாப்வேயில் இருப்பதாக நம்பப்படுகிறது. சர்வதேச மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து அவரை கைது செய்யத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று மூத்த புலனாய்வு அதிகாரி லீ மார்ட்டின் தெரிவித்துள்ளார். மேலும், சந்தேக நபருக்கு நேரடியாக விடுத்துள்ள கோரிக்கையில், “மார்க், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். குற்றவியல் விசாரணைக்கு எல்லைகள் கிடையாது. எனவே, உடனடியாக உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைந்து முறையான வழிக்கு வாருங்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் நற்பண்புகளை நினைவுகூர்ந்து அண்டை வீட்டாரும் நண்பர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Spread the love

