முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமருமான மகிந்த ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
லலித் வீரதுங்கவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்த தீபாலி விஜேசுந்தர மற்றும் ருவன் பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லலித் வீரதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, தனது கட்சிக்காரருக்கு ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பு வந்துள்ளதால், குறித்த காலப்பகுதிக்காக தற்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் குழாம் லலித் வீரதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடையை மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டனர்.
சில் துணிகளை பகிர்ந்தளித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50 மில்லியன் ரூபா அபராதத்தையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க விதித்திருந்தார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் அதனால் தம்மை அந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னைய அரசாங்க காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளுக்கு சில் துணிகளை பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மூன்று வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.