இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையத்தில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சக வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் என்னும் படைவீரரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். நேற்று நள்ளிரவு காவலர்கள் வேலைநேரம் மாறும் நேரத்தில், பல்வீர் சிங் திடீரென தனது துப்பாக்கியினால் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒரு தலைமைக் காவலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தொடர்ந்தும் அவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நிலையில் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
பல்வேர் சிங், இரண்டு மாதம் யோகா பயிற்சியை முடித்து விட்டு சில நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.