200
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, பிணை நிபந்தனைகள் மீறப்பட்ட விவகாரத்தில் அவரை மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கபில சந்திரசேனவின் மரணம், இந்த பாரிய ஊழல் விசாரணையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்பஸ் ஊழல் தொடர்பாக கடந்த மார்ச் 12-ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே 5-ஆம் திகதி 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் (சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும்) அவர் விடுவிக்கப்பட்டார். கபில சந்திரசேனவின் உறவினர்கள் எனப் பொய்க்கூறி, தலா 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிணை நிபந்தனைகளை மோசடியாக மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்தமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டிருந்தார். காவற்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த மரணம் குறித்துக் காவற்துறையினர் கொள்ளுப்பிட்டி பகுதியில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இடைத்தரகர்கள் மூலம் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான அவுஸ்திரேலிய வங்கி கணக்கிற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி இலங்கை ரூபா) இலஞ்சம் வழங்கியதாகப் சர்வதேச அளவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில் நடந்த மிகப்பாரிய ஊழலாகக் கருதப்படுகிறது.
கபில சந்திரசேனவின் திடீர் மரணம், ஏர்பஸ் ஊழல் வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் உண்மைகளை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் எழுந்துள்ளது.
பிணை நிபந்தனைகளுக்காக ‘கூலிக்கு’ ஆட்களை அமர்த்தி நீதிமன்றத்தை ஏமாற்றியமை வெளிச்சத்திற்கு வந்த சில மணிநேரங்களிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. சர்வதேச ரீதியான விசாரணைகளை எதிர்கொண்டு வந்த ஒரு முக்கிய அதிகாரி, மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சத்தில் இம்முடிவை எடுத்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளனவா என்பது உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் காவற்துறை விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.
Spread the love

