139
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று (09-05-2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பெருமளவிலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் மின் கசிவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
நேரில் ஆய்வு: தீ விபத்து குறித்து அறிந்ததும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
சேத விபரங்கள்: புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் உட்பட களஞ்சியத்திலிருந்த சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீயினால் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்: உயிரையும் பொருட்படுத்தாது தீயைக் கட்டுப்படுத்தப் போராடிய யாழ். மாநகர சபைத் தீயணைப்புப் படையினர், காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினருக்கு ஆளுநரும் அமைச்சரும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.
பொதுமக்களுக்கான அறிவிப்பு:
மருந்துக் களஞ்சியம் சேதமடைந்த போதிலும், நோயாளிகளுக்கான மருந்து விநியோகத்தில் எவ்விதத் தடையுமிருக்காது என மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உள்ளக மருந்தகம் மற்றும் வவுனியா, அநுராதபுரம் உள்ளிட்ட ஏனைய மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளைப் பெற்று விநியோகிக்கத் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
தீ விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். அதுவரை மருந்துக் களஞ்சியம் காவற்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சேதமடைந்த கட்டடத்தைப் புனரமைக்கவும், மேலதிக மருந்துகளை உடனடியாகக் கொழும்பிலிருந்து கொண்டு வரவும் சுகாதார அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Spread the love

