65
யாழ்ப்பாணம் புத்தூர் வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் வாகன மற்றும் முச்சக்கர வண்டி மோதிய கொடூர விபத்தில், படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும், எதிரே வந்த முச்சக்கர வண்டியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் முச்சக்கர வண்டி முற்றாக நசுங்கியதுடன், அதில் பயணித்த மூன்று இளைஞர்களும் கடுமையான காயங்களுக்குள்ளாகினர். விபத்து நடந்த உடனே அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவற்துறையினர் இணைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞர்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
இவ்விபத்து தொடர்பாக அச்சுவேலி காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர். மேலும், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இத்தகைய அதிவேக வாகன விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

