Home இலங்கையாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

"மஹிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது" - நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சாடல்!

by admin
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோப்பாய் காவல் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்த மிக முக்கியமான கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயலாபங்களுக்காகவும், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக இனவாதத்தைத் தூண்ட முயல்வதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வடபகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளின் மூலம் பல சட்டவிரோத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.
நாட்டின் சட்டவாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
“எளியோருக்கு ஒரு நீதியும், பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் இந்த நாட்டில் இல்லை; அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு” என்று குறிப்பிட்ட அவர், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும், காவற்துறையினர் பாரபட்சமின்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். காவல் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு முறையான தீர்வு கிடைக்காவிடின், அது குறித்து உயர் காவற்துறை அதிகாரிகளுக்கோ அல்லது காவற்துறை மா அதிபருக்கோ அறியவூட்டி தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதே காவற்துறையினருக்குக் கிடைக்கும் உயரிய விருதாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், வடபகுதியில் மக்கள் மொழிப் பிரச்சினையின்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், வடக்கின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், காவற்துறைச் சேவைகளை மேம்படுத்தவும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த இளையோர்கள் காவற்துறைச் சேவையில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். பிரிவினைவாதமும் வேறுபாடுகளும் அற்ற, எதிர்காலச் சந்ததியினர் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய ஒரு சுமுகமான சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம், களுத்துறையில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதைத் தெரிந்துகொண்டே, நாட்டைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு மஹிந்த தரப்பு தேசிய மக்கள் சக்தியிடம் கேட்டு நிற்பதாகக் கடுமையாகச் சாடினார்.
பொதுமக்களின் பணத்தைச் சூறையாடியவர்களும், ஆட்சி அதிகாரத்திற்காகப் பல கொலைகளைச் செய்தவர்களும் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போயுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் அதிகாரத்தை, மஹிந்த தரப்பினர் கேட்பதற்காக ஒருபோதும் தூக்கிக் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் நோக்கோடும், புதிய அரசியல் கலாசாரத்தோடும் பயணிப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்றும், எதிர்வரும் காலங்களிலும் தேசிய மக்கள் சக்தியே மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சியாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More