Home இலங்கை ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்….

ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சி முறையை குறிப்பதல்ல. – இரா.சம்பந்தன்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது பிரதேசத்தை குறிக்கிறது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதரவு தெரிவித்து யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என கூறுகிறார்கள். இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி என்ற சொல் தமிழில் இல்லை. ஏக்கிய இராச்சிய என்ற சொல் சிங்களத்தில் உள்ளது. அதனை சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள்.

சிங்கள மக்கள் நினைக்கிறார்கள் அந்த சொல் இருந்தாலே நாடு பிரிக்கப்படாது என. அது தொடர்பாக சிங்கள மக்கள் எங்களிடம் கேட்டபோது நாம் கூறினோம் நாடு பிரிக்க நாங்கள் கேட்கவில்லையென. ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது பிரதேசத்தை குறிக்கிறது.

நீதிமன்றில் விவாதத்திற்கு வந்தால்கூட அரசியலமைப்பில் கூறப்பட்ட சொல்லை மீறி எதனையும் யாரும் கூற இயலாது. பகிரப்பட்ட அதிகாரங்கள் மீள பெறமுடியாது. பகிரப்பட்ட அதிகாரங்களில் அரசு தலையிட முடியாது. அதிகாரங்கள் பகிரப்பட்ட ஒழுங்கில் மாற்றம் செய்ய முடியாது. அதிகாரம் மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இவ்வாறு சமஷ்டிக்குரிய உள்ளடங்கள் உள்ளது.

வடகிழக்கு இணைப்பு தொடர்பில் வடகிழக்கு ஒரு மாகாணமாக கருதப்படலாம், இரு மாகாணங்களாக கருதப்படலாம், வடகிழக்கு இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். என விடயங்கள் உள்ளது. இது விடயம் சம்மந்தமாக முடிவுகள் இல்லை. முஸ்லிம தலைவர்களுடன் பேசி இந்த விடயம் தொடர்பாக முடிவுக்கு வரவேண்டும். அவர்களை உதாசீனம் செய்து இந்த விடயத்தை நிறைவேற்ற முடியாது.

இடைக்கால அறிக்கையில் முன்னேற்ற கரமான விடயங்கள் இருக்கிறது. சில விடயங்கள் சம்மந்தமாக முன்னேற்றங்கள் தேவை. இதனை உதாசீனம் செய்ய முடியாது. எங்களை வெளியேறுங்கள் என சில தலைவர்கள் சொன்னார்கள். நாங்கள் வெளியேற முடியாது. நாங்கள் மக்களால் தேர்வு செய்யப் பட்டவர்கள் மக்களுக்கு தேவையானதை செய்யவேண்டும். மக்கள் ஏற்காத ஒரு தீர்வை நாங்கள் ஏற்கப்போவதில்லை.

கோசங்களின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் நாங்கள் பல சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். அதேபோல் இப்போதும் இழக்க முடியாது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்தேசிய மக்கள் முன்னணி என வருகிறார்கள். இவர்கள் யார்? பண்டா- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்தார்கள், டட்லி- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனையும் எதிர்த்தார்கள்.

தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தபோது அதனையும் எதிர்த்தார்கள். இப்போது எமக்கு சமஷ்டி தெரியாது. தங்களுக்கே சமஷ்டி தெரியும் எனக் கூறுகிறார்கள். அந்த சைக்கிளிலில் தான் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்களா? ஏன் சமஷ்டியை எதிர்த்தீர்கள்? இன்று சமஷ்டி எங்களுக்கே தெரியும் என்கிறீர்கள். இதேபோல் மற்றொரு தரப்பு மஹிந்த ராஜபக்ஷவுடன் 2004-2015 வரை ஒட்டிக் கொண்டிருந்தவர்கள்,

மஹிந்த ராஜபக்ஷ செய்த துரேகங்களை அங்கீகரித்தவர்கள், மஹிந்த 13ம் திருத்தச்சட்டத்தை நீக்க முயற்சித்தபோது மௌனமாக இருந்தவர்கள், 18ம் அரசியலமைப்பு சீர்திருத்த்தை கொண்டுவந்தபோது ஆதரித்து 3ல், 2 ஆதரவை கொடுத்தவர்கள். இவர்களும் இன்று யாழ்ப்பாணத்தில், திருகோணமாலையில் போட்டியிடுகிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராக மஹிந்த செயற்பட்டபோது ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உதவியர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள். இவர்களிடம் தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் உத விகளை பெற்றிருக்கலாம். அதற்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த கட்சியை ஆதரிக்க கூடாது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி 56ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளது. 30 வருடம் ஆயுதப்போராட்டம் பல துன்பங்களை சந்தித்தோம். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தார்கள். அந்த நிலை மாற்றப்படவேண்டும்.

இப்போது இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தவேண்டும். அமைச்சர், பதவி சலுகைகளுக்காக உங்களை கைவிடமாட்டோம். இவற்றை புரிந்து எங்கள் நிலைப்பாடு எங்கள் பங்களிப்பு அவர்களுடைய நிலைப்பாடு சரித்திரம் இவற்றை அறிந்து ஒற்றுமையாக ஒருமித்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவினை தந்து திடமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More