Home இலங்கையாழில் பிறந்து, பிரித்தானிய உயர்கல்வித் துறையில் சிறப்பான சேவையாற்றி வரும் சேர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு ‘நைட்’ (Knighthood) பட்டம் வழங்கி கௌரவிப்பு!

யாழில் பிறந்து, பிரித்தானிய உயர்கல்வித் துறையில் சிறப்பான சேவையாற்றி வரும் சேர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு ‘நைட்’ (Knighthood) பட்டம் வழங்கி கௌரவிப்பு!

by admin
இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து, பிரித்தானிய உயர்கல்வித் துறையில் சிறப்பான சேவையாற்றி வரும் சேர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்கள் ‘நைட்’ (Knighthood) பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்த கௌரவம், 2026ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் (King’s New Year Honours) உயர்கல்வித் துறைக்கும், குறிப்பாக கல்வியில் சமத்துவம், உள்ளடக்கம் (Inclusion) மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது.
வின்ட்சர் மாளிகையில் ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டு (Investiture) விழாவில், பாரம்பரிய அரச மரபின்படி முழங்காலிட்டு அமர்ந்திருந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தோள்களில் வாளால் தொட்டு, மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவருக்கு அதிகாரப்பூர்வமாக ‘நைட்’ பட்டத்தை வழங்கினார். இதன் பின்னர் அவர் “Sir Nishan Canagarajah” (சர் நிஷான் கனகராஜா) என்ற கௌரவப் பட்டத்தால் அழைக்கப்படுகிறார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் பிறந்த நிஷான் கனகராஜா, சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். 1985ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று University of Cambridge பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்குத் தெரிவாகி, 1989ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும், 1993ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
பின்னர் பிரித்தானியாவின் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் ஆய்வுத் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2019 நவம்பர் 4ஆம் தேதி முதல் University of Leicester பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தராக (President and Vice-Chancellor) பணியாற்றி வருகிறார். உயர்கல்வியில் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் அவரது தலைமைத்துவம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழர் ஒருவராக உலக உயர்கல்வித் துறையில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான ‘நைட்’ பட்டத்தைப் பெற்றுள்ள சர் நிஷான் கனகராஜாவின் இந்த சாதனை, இலங்கைத் தமிழர் சமூகத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More