47
இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை (Renewable Energy Development) நிலையான முறையில் முன்னெடுப்பதற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (Strategic Environmental Assessment – SEA) தொடர்பான முக்கிய செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் எரிசக்தித் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் நோக்கோடும், இப்பிராந்தியத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்து, மூலோபாய திட்டமிடலை வலுப்படுத்தும் நோக்கத்தோடும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையினால் (SLSEA) இந்த SEA மதிப்பீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) கடந்த 2025 செப்ரெம்பர் மாதத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு (Terms of Reference – ToR) அமைய இந்த மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளை ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டமிடல் கருவியாக இந்த ‘SEA’ விளங்குகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை ஆராய்ந்து, நிலையான அபிவிருத்திக்கான சிறந்த முடிவுகளை எடுக்க வழிவகை ஏற்படும்.
இந்த உயர்மட்டச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) பொறியியலாளர் என். சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், SEA ஆலோசனை நிறுவனத்தின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா மற்றும் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் (Oriental Consultants Global Co.) குழுவின் தலைவி டொமோகோ ஹட்டோரி உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் உத்திகளையும் பகிர்ந்துகொண்டனர்.
Spread the love

