ரவியை இராஜினாமா செய்வித்து இவ்வாட்சியிலுள்ள மஹா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்க மாத்திரமில்லை. இன்னும் பலர் ஒளிந்துள்ளனர். 2015ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகளை ஏலம் விடும் கலந்துரையாடலில் பிரதமரின் நெருங்கிய நண்பரான மலிக் சமரவிக்கிரம மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் நாட்டின் நிதி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விடயமே இதன் பின்னால் மிக முக்கியமான நெருங்கிய புள்ளிகள் மறைந்திருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.
இன்னும் வெளிப்படையாக சொல்லுவதானால் இதன் பின்னால் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்க வேண்டும்.இந்த விடயம் மிகவும் நீதியான முறையில் கையாளப்பட வேண்டுமாக இருந்தால் ரவி கருணாநாயக்கவுடன் சேர்த்து பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முறி மோசடியில் ஒரு லட்சம் கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.எனவே,ரவி கருணாநாயக்கவின் குறித்த அமைச்சு இராஜினாமா என்பது மஹா திருடர்கள் தப்பிக்க அனைவரையும் திசை திருப்ப மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
எனவே இவர் தொடர்பான விசாரணைகள் நீதியாக மேற்கொள்ளப்படுவதோடு குறித்த ஊழல் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.