கல்கமுவ, கிரிபாவ, சாலிய – அசோகபுர பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, அம்மாணவியை கொலைசெய்த தன்னுடைய மகனைத் தூக்கிலிடுமாறும் அதனால், தனக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லையென்றும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவரின் தாய், கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 36 வயதான ஹர்சன சமன் குமார என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். அவருடைய தாயாரான குசுமாவதியே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
கல்கமுவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதம், மாணவியின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைதொரு குற்றவாளியின் தாயாக இருப்பதால் ஏற்பட்டுள்ள மனவேதனையைத் தாங்கிகொள்ள முடியவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே, சந்தேகநபரும் வசித்து வந்துள்ளார்.
வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மாணவி மயங்கியதையடுத்து அச்சமடைந்த அந்த நபர், அம்மாணவியைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளார். சந்தேகநபரின் உடலிலும், படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்திலும் கீறல்காயங்கள் பல உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசியில், நிர்வாண மற்றும் பாலுறவில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய சுமார் 300க்கும் மேற்பட்ட படங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, அநுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய வேளையில், அவரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.