இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலதிமிங்கலம் எனப்படும் புளுவேல் இணைய விளையாட்டை தடை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டதையடுத்து இந்த இணைய விளையாட்டுக்கு தடை விதிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் விசாரித்த நீதிபதிகள் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.
புளுவேல்; இணைப்புகள் வழங்கப்படுவதை தடுக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களை இந்திய சட்ட வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் தர மறுக்கும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களை இந்தியாவில் நுழையாமல் தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செமூக வலைதளங்கள் வழியாக புளுவேல் இணைப்புகள் பகிரப்படுவதற்காக இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்களை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மத்திய அரசு தூதரகம் மூலம் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு புளுவேல் இணைப்புகளை நிரந்தரமாக முடக்கவும், இதில் தொடர்புடையவர்களை சட்டப்படி தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.