நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற கோரி 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதனை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கினால் நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் மாசுபடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்துவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.
எனினும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.